recent posts...

Thursday, September 20, 2007

Geity நினைவலைகள்

படிக்கர காலத்துல கைல தம்படி பணம் கூட இருக்காது. ஒரு ஓட்ட சைக்கிள் இருக்கும், அப்பப்ப காத்து போகும்போது அடிச்சுக்க ஒரு 25 நயா பைசா மட்டும் இருக்கும்.
காத்து போகாத நாட்களில் கையில் இருக்கும் 25 பைசாவ எடுத்து, மத்த பயலுவ கிட்டையும் ஒரு கலெக்ஷன் வேட்டை நடத்தி 1.25 ரூவாய்க்கு, சிங்கிள் டீ வாங்கி பகிர்ந்து குடிப்போம்.

அப்பரம் கம்ப்யூட்டர் எல்லாம் கத்துக்கும்போது, காலை முதல் இராத்திரி 'கடைய' சாத்தர வரைக்கும் அங்கயே மேஞ்சுகிட்டு இருப்போம்.
மதியானம் பசிக்கும்போது, வழக்கம் போல, கலெக்ஷன் வேட்டையில் இறங்கி, 2 ரூபா ஸெட்-தோச வாங்கி சாப்பிடுவோம்.
ஸெட்-தோசை, மாணவர்களின் வரப் பிரசாதம்.
முந்தாநாளு மாவுல, மஞ்சத் தூளப் போட்டு, மிச்சம் மீதி இருக்கர எல்லா ஐட்டத்தையும் கலக்கி, தடியா ஊத்திக் குடுப்பாங்க. கூடவே ஒரு சூப்பர் குர்மா. சாப்டா, ராத்திரி வரை பசிக்காது.

கூடவே இருக்கர பசங்கள்ள, கொஞ்சம் பணக்கார பயலுவ இருப்பானுங்க. அவங்க வரும் நாளெல்லாம் ஃபுல் டீயும், அன்-லிமிடெட் மீல்ஸும், சாயங்காலம் பாவ்-பாஜியும் கிடைக்கும்.
நல்ல பசங்க, மனசு கோணாம வாங்கித் தருவாங்க.

பயலுவள்ள முக்கியமானவன் கோபாலு. எப்பவும் துட்டு நெறைய வச்சிருப்பான். எல்லாருக்கும் தம்ஸ்-அப், கோல்ட்-ஸ்பாட், லஸ்ஸி அது இதுன்னு அவன் கூட இருக்கும் நாளெல்லாம் ஜமாய்ச்சிடுவான். வீட்டுக்கு ஒரே பையன். அப்பாவும் அம்மாவும் வேலைக்குப் போறவங்க, அதனால கோபாலுவ கேள்வி கேக்க ஆளில்லாம ஃப்ரீ பேர்டா சுத்திக்கினு இருந்தான்.
அவன் எனக்காக செலவு பண்ணி வாங்கிக் கொடுத்த சாப்பாடு, கூட்டிட்டுப் போன சினிமா, வீட்ல பாத்த 007 வாடகை வீடியோ படங்கள், இதுக்கெல்லாம் கணக்கே இல்ல.

இப்படித்தான் ஒரு நாள், நானு, கோபாலு, க்ருஷ்ணன், பாபு, ரமேஷ் எல்லாரும் மொட்ட மாடீல பேசிக்கினு இருந்தோம். +2 விடுமுறை நேரம்.
மச்சி போரடிக்குதுல்ல, ஏதாவது படம் போலாமான்னு பேசிக்கிட்டு இருந்தோம்.
பஸ் செலவு, டிக்கட், பாப்கார்ன், தம்ஸ்-அப், எல்லாம் கோபாலுதான் செலவு பண்ணனும். அதனால, அவனையே எல்லா வாட்டியும் படம் சூஸ் பண்ண விட்டுவோம்.
ஒன்லி இங்கிலீஷ்தான் பாப்போம். சத்யம் விட்டா, பாரடைஸ், பாரடைஸ் விட்டா, பைலட், கெயிட்டி இதுல ஏதாவது ஒண்ணுலதான் அடிக்கடி பாப்போம்.

கோபாலு, கெயிட்டீல ஜாக்கிசான் போலீஸ் ஸ்டோரி படம் போட்டிருக்காண்டா அங்கயே போலாம்னான். சரிடா மச்சின்னு எல்லாரும் கும்பலா போணோம்.
3.30 மணி ஷோக்கு 2 மணிக்கெல்லாம் ஆஜராயிட்டோம்.
ரோட்ல இருக்கர கடைல எதையோ வாங்கி கொறிச்சிட்டு கவுண்ட்டர் தொறக்க வெயிட்டிக்கிட்டு இருந்தோம்.

தியேட்டருக்கு வெளியில சின்ன கூட்டம். கூட்டத்துக்கு நடுவுல ஒரு புடு புடு காரர் ஒருத்தர் தலைல முண்டாசெல்லாம் கட்டிக்கிட்டு டும் டும் டும் ஒரு டப்பால தட்டிக்கிட்டு இருந்தாரு.
ஒரு கீரிப்புள்ள கயித்துல கட்டி வச்சிருந்தான்.
என்னடா பண்றான்னு பாக்க அஞ்சு பேரும் போணோம்.
சுத்தி நின்ன கூட்டத்தோட நாங்களும் சேந்துக்கிட்டோம்.

மோடி மஸ்தான அப்பத்தான் மொத தபா நேர்ல பாக்கறேன்னு நெனைக்கறேன். ஆள், மாநிறத்துல, நெத்தியில விபூதி, பெரிய குங்குமம், அடர்த்தியா புருவம், கலர் கலர் லுங்கி, கைல ஒரு எக்கச்சக்க கருப்பு கயிறுன்னு பயங்கரமா இருந்தான்.

"இன்னும் பத்தே நிமிஷம் சார். கூடைல இருக்கர பாம்ப தொறந்து விடுவேன். கீரியா, பாம்பா யார் வீரன்னு காட்டப் போறேன். ஏதாவது ஒண்ணுதான் சார் உயிர் பொழைக்கும். இத நம்பிதான் என் சாப்பாடு இருக்கு. ஐயாமாரெல்லாம் ஏதாவது துட்டு போடு சார்" - இப்படி வள வள வளன்னு சொல்லிட்டே இருந்தான்.

வேடிக்கை பாத்த கூட்டத்துல, எல்லாரும் சில்லரைய தூக்கி போட்டாங்க. நம்ம கத தான் தெரியுமே, போடரதுக்கு ஒண்ணுமில்ல. கோபாலு வழக்கம் போல, ஒரு ரூவாய டாஸ் போடர மாதிரி தூக்கி வுட்டான்.

எல்லாரும் காசு போட்டதும், மஸ்தான் எழுந்து வந்தான் ஒரு குச்சிய எடுத்து, சர்ர்ர்ர்னு சுத்தி நிக்கர கும்பலு கால்ல இடிக்கர மாதிரி ஒரு வட்டம் போட்டான்.

ஒரு ரூபாய்க்கு மேல போட்ட ஐயாமாரெல்லாம் கைய நீட்டி கோட்டுக்குள்ள கால வைங்க சார். மத்தவங்கெல்லாம் கோட்டுக்கு வெளீல போங்க சார் தூ ன்னான்.

கோபாலு நெக்குலா என்ன ஒரு பார்வ பாத்துட்டு, "மச்சி, நீ வெளீல நிக்கணும்டான்னு" என்ன தள்ளி விட்டுட்டு, அவன் கால எடுத்து உள்ள வச்சு, ஸ்டைலா கைய நீட்டி நின்னான்.

கை நீட்டி நின்னது மொத்தம் ஒரு ஆறு பேர் இருப்பாங்க. மஸ்தான் டக்குன்னு எழுந்து வந்தான், கைல மை எடுத்து, நீட்டிக்கிட்டு நின்ன எல்லார் கைலயும் ஒரு பொட்டு வச்சான்.
"அப்படியே நில்லு சார், நாகம்மாவ தொறந்து விடரேன்னான். என் குடும்பம் சாப்ட ரூபா கொடுத்த மகராசன் சார் நீ. உன் குடும்பம் நல்லாயிருக்க நாகம்மா கூடயிருப்பா சார். இதோ நாகம்மாவ தொறந்து விடப் போறேன் சார். சண்டைல நாகம்மா ஜெயிக்கணும் சார். கீரிக் கம்னாட்டி தோப்பான் பார். நாகம்மாக்கு உன் கைல இருக்கர ஏதாச்சு போடு சார்"னு திரும்ப நீட்டினான் ஒரு கூடைய. ஆறு பேர்ல நாலு பேர், வேற ஒண்ணும் இல்லன்னுட்டாங்க.

ஒண்ணுமில்லன்னு சொல்லாத சார், நாகம்மா காதுல விழுந்தா, நீ விக்கி விக்கி சாவ சார்னான். நாலுல ஒருத்தர் மீசக் காரரு. அவர் மஸ்தான எதுத்து கொரல் விட்டாரு.
எல்லாம் தூக்கிப் போட்டு ஒடச்சுடுவேன் போடான்னாரு. மஸ்தான் டென்ஷனாயி, விபூதியெல்லாம் காத்துல தூக்கி போட்டு, வாந்தி எடுத்து 10 நாள்ள படுத்த படுக்கையா ஆயிடுவன்னு சாபம் விட்டான். போடாங்கோன்னு , மீசக்காரரும், மத்த மூணு பேரும் கெளம்பி போயிட்டாங்க.

கோபாலு, மூஞ்சி வெளுத்துடுச்சு, பயத்துல நீட்டின கை, நடுங்கிட்டு இருந்தது.
மச்சி போயிடலாம்னு இழுத்தா, கோட்ட விட்டு கால எடுக்க மாட்றான். ஏதாவது ஆயிடப் போதுறா, முடிச்சுட்டு வரேன்னான்.
மஸ்தான், மிச்சம் இருந்த கோபாலுகிட்டயும் இன்னொருத்தர் கிட்டயும், கொஞ்சம் கோவமா, ஏதாச்சும் போடுங்க சார் இந்தக் கூடையில நாகம்மா காக்க மாட்டான்னான்.
இன்னொருத்தரு கொஞ்சம் சில்லரைய போட்டாரு. நம்மாளு, அஞ்சு ரூபாய தூக்கிப் போட்டான்.

ஒரு கறுப்புக் கையிர எடுத்து ரெண்டு பேர் கைலயும் கட்டினான் மஸ்தான்.
"உங்க குடும்பத்தையே நாகம்மா காபாத்துவா சார். இந்த கயிர, பௌர்ணமி அன்னிக்கு, உங்க ஊர் கோயில்ல கொண்டு போய், பார்வதி தேவி செலைக்கு முன்னால வச்சு கழட்டி மூணு சுத்து சுத்தி தலைக்கு பின்னாட தூக்கிப் போட்டுடணும் சார்னான். அதுக்கு முன்னாடி கழுட்டினா, ரத்தம் கக்கி சத்துடுவ சார். சக்தி வாய்ந்த கயிறு சார்னான்.

கோபாலுக்கு வேர்க்க ஆரம்பிச்சிடுச்சு. சரி, முடிஞ்சுடுச்சு எஸ்கேப்பிடலாம்னு, கோபாலு கைய புடிச்சு இழுத்தா, கயித்துக்கு 10 ருபா குடு சார்னான். கோபாலு வாய் தொறக்கல, எதையோ பாத்து பயந்த மாதிரி பேந்த பேந்த பாத்துக்கிட்டு நின்னான்.
"சார் 10 ரூபா கொடு"ன்னான் மஸ்தான். "கயிறு வேணாண்டா கழட்டிக் கொடுத்துடுடா"ன்னேன் நான்.
"வேணாம்டா ஏதாச்சும் ஆயிடப் போது"ன்னு சொல்லிட்டு 10 ரூபாய சொளையா கொடுத்து மெதுவா எஸ்கெப் ஆணோம்.

நாகம்மாவும் கூடைய விட்டு வெளியில வரல. உள்ள நாகம்மா இருக்கான்னு கூட தெரியல.
வுட்டுது சனின்னு கெயிட்டிக்குள்ள போயி டிக்கெட் வாங்கி ( நல்ல வேள, ஒரு 50 ரூவா வச்சிருந்தான் ), சமோசா வாங்கி உள்ள போணோம்.
கோபாலு, ஏ.சிலயும், வேத்துக் கொட்டினான். ஒரு ப்ரம்ம புடிச்ச மாதிரிதான் கடைசி வரைக்கும் இருந்தான்.

திரும்ப வீட்டுக்கு கெளம்பும்போது, "டேய் அறுத்துப் போடுடா கயிர"ன்னேன். "அதெல்லாம் வேண்டாம்டா, ஏதாவது ஆயிடப் போது"ன்னு, கயித்த அப்படியே வச்சிருந்தான்.

பஸ்ல ஏறி வீட்டுக்குக் கிட்ட வரும்போது, சகல நெலமைக்கு வந்திருந்தான்.
"டேய், கயிர அவுத்து குடுடா"ன்னான் என்ன பாத்து கோபாலு.

பகீர்னு ஆச்சு எனக்கு.

"மச்சி, வேணாம்டா, ஏதாவது ஆயிடப் போவுது. அவன் சொன்ன மாதிரி பௌர்ணமி அன்னிக்கே கழட்டிப் போடு"ன்னேன்.

அம்புட்டுப் பேரும் எஸ்கேப்.

பாவம் கோபாலு, தூக்கம் கெட்டது அவனுக்கு அன்னிக்கு.
மறு நாள், அவங்கப்பா அதப் பாத்து, முதுகுல ரெண்டு போட்டு, அறுத்து கெடாசினாராம்.

யாரும் இரத்தமெல்லாம் கக்கி சாவல ;)

நல்ல நாட்கள் அதெல்லாம். எந்தக் கவலையுமில்லாம ஊர் சுத்திக்கிட்டு சந்தோஷமா திரிஞ்சோம்.
கைல காசு இல்லன்னாலும், நிம்மதியான கால கட்டங்கள் அவை.
தேங்க்ஸ் டு கோபாலு லைக் பீப்பிள்! :)

மச்சி கோபாலு, இந்த பதிவு உனக்கு சமர்பணம் ;)

9 comments:

SurveySan said...

பெயர்கள் அனைத்தும் கற்பனையே.

உண்மைத்தமிழன் said...

உதயம் தியேட்டர் பக்கம், அபிராமி தியேட்டர் பக்கத்தில் இப்பொழுதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.. கெயிட்டி தியேட்டரை இப்போது மூடி மங்களம் பாடிவிட்டார்கள்.

ஏமாறுபவன் இருக்கின்றவரையிலும் ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான். அது சரி.. இத்தனை வருடம் கழித்து எழுதுகிறீர்கள். இப்போதும் ஏன் பெயர்களை மட்டும் கற்பனைக்கு கொண்டு போய்விட்டீர்கள்..?

SurveySan said...

வாங்க உண்மை தமிழன்,
அறியாத வயசுல்ல, அதான் பையன் பயந்துட்டான். :)
கெயிட்டி மூடிட்டாங்களா? நல்லதுதான். காலேஜ் படிக்கும் காலத்தில், கெயிட்டி, மற்ற படங்களுக்கு பெயர் போனதா ஆயிருந்தது.

உண்மை பெயர் போட்டு எழுதினா, பசங்க அடிக்க வந்துடுவாங்களே. கோபாலு மொத ஆளா வருவான் ;)

Anonymous said...

emmaam beriya padhivu

SurveySan said...

அனானி, நானே ஒருத்தர்தான் கருத்திருக்காருன்னு கவலைல இருக்கேன்.. நீங்க வேர, வெறுப்பேத்தறீங்க.

எவ்ளோ பெருசா இருந்தா என்னங்க? படிக்க முடிஞ்ச வ்வரைக்கும் படிச்சுட்டு, குட்ட்டியா கருத்த சொல்லலாம்ல :)

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
SurveySan said...

மூர்த்தி பெயரில் வந்த பின்னூட்டம் எலிக்குட்டி சோதனையில் தோல்வியுற்றதல் டெலீட் செய்யப்பட்டது.

எது எப்படியோ, நல்ல முடிவுக்கு, நல் வாழ்த்துக்கள் எப்பொழுதும் உண்டு.

Anonymous said...

enna nalla mudivu?

SurveySan said...

osaichella.blogspot.com paarunga.